ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 9



23/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..

பத்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாத தொடரில் இது எனது ஒன்பதாவது வாய்ப்பு.

ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நான் கூறியிருந்ததை மறுப்பதற்காக, குர் ஆன் தான் அடையாளம் என்றீர்கள்.
அதை நியாயப்படுதுவதற்க்காக முதல் கட்டமாக அது நபியிடம் சொல்ல சொல்லும் வசனமல்ல, அல்லாஹ்வே பேசுகிற வாசகம் என்றீர்கள்.
அது தவறு ! அல்லாஹ்வே பேசுவதாக இருந்தால் தன்னை பின்பற்றுமாறு அல்லாஹ் சொல்ல மாட்டான். நபியை தான் பின்பற்றுமாறு சொல்வான்.
அல்லாஹ்வை பின்பற்ற வேண்டும் என்றால் அல்லாஹ் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற வாதமும் தவறு. அது அல்லாஹ்வின் நடையே அல்ல. குர் ஆன் முழுவதும் நீங்கள் தேடிப்பார்த்தால் அப்படிப்பட்ட நடையில் அல்லாஹ் பேசுவதில்லை. நீங்கள் இந்த குறிப்பிட்ட வசனத்தை நியாயப்படுதுவதற்க்காக இதை சொல்கிறீர்களே தவிர குர் ஆனின் பொதுவான நடையை குறித்து சிந்திக்கவில்லை. 
மேலும், மறுமை நாளை பற்றி இந்த குர் ஆனில் உள்ளது என்று தான் பொருள் செய்ய வேண்டும் எனவும் சொல்கிறீர்கள். அதுவும் தவறு.அவர் அல்லது அது அந்த நாளின் அத்தாட்சி என்பது தான் அந்த வசனத்தின் நேரடி பொருள். 
இதில் அந்த செய்தி உள்ளது என்கிற அர்த்தமும் கொடுக்கலாம் என்றாலும் அந்த இடத்தில் இது பொருந்தாத அர்த்தம் - காரணம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்.
இதில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருந்தாத வார்த்தை அமைப்பு. கியாமத் நாளை பற்றியோ வேறு எதை பற்றியோ குர் ஆனில் உள்ளது என்றால் அதில் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. காபிரும் குர் ஆனில் அது உள்ளது என்று நம்பதான் செய்கிறான். 
இந்த செய்தி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது, யாரும் இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று பேசுவது தான் பொருளற்ற ஒன்று.

நீங்களோ, இதை கவனிக்காமல், ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம், அதில் சந்தேகம் கொள்ளாதீர்கள், என்னை பின்பற்றுங்கள் என்று சொல்வது பொருளற்றது என்று பேசுகிறீர்கள். இது மிகவும் பொருத்தமான ஒன்று தான்.
ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்றால் அவர் மீண்டும் வருவார் என்கிற கருத்து இதில் ஒளிந்துள்ளது. அவர் மீண்டும் வருவார் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருத்தமானது தான். இந்த விஷயத்தில் என்னை பின்பற்றுங்கள் என்பதும் பொருத்தமான ஒன்று தான். அதே சமயம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்று சொல்வது தான் பொருத்தமற்றது. 
குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று சொல்வது தான் பொருளற்றது.

மேலும் இதை நியாயப்படுதுவதற்க்காக,

குர்ஆனில் கியாமத்தை குறித்து சொல்லபடுகிறது. எனவே இந்த குர்ஆனில் சந்தேகம் கொள்ளாதீர்கள். அதுவே என் வழி , என் வழியை பின்பற்றுங்கள் என்ற எச்சரிக்கை தான் சரியானதாக இருக்கும் பொருந்தியும் போகும்.


என்று அதற்கும் மாற்று மொழியாக்கம் ஒன்றை செய்கிறீர்கள். ஒன்றை நியாயப்படுத்த எத்தனை முயற்சிகள் தான் எடுப்பீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, எனவே இந்த குர் ஆனை சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று புரிய வேண்டுமாம். அப்படி புரிய வேணடுமானால் அப்படி வாசகம் இருக்க வேண்டும்.
வார்த்தை அமைப்பின் படி அவர் அல்லது அது கியாமத் நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தான் உள்ளது.
மேலும், குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது குர் ஆனில் சந்தேகம் கொள்ள தடையான ஒன்றல்ல.
குர் ஆனில் அது பற்றி சொல்லப்பட்டுள்ளது, ஆகவே மொத்த குர் ஆனிலும் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்றால், ஏதோ கியாமத் நாளை பற்றி பேசுவது என்பது, குர் ஆனை பற்றி எந்த சந்தேகத்தையும் செய்வதை விட்டும் தடுக்கிறது என்பது போல கருத்தாகிறது , இதன் காரணமாகவும் நீங்கள் சொல்வது பொருளற்றது !

ஈஸா நபியை குறித்து  பேசிவிட்டு இடையில்  மலக்குமார்களை தான் நாடியிருந்தால் வழி தோன்றல்கலாக்கியிருப்பான் என்றும் எச்சரிக்கிறான்.
எதற்க்கான எச்சரிக்கை இது ?
ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சி என்று நம்ப வேண்டும் என்பதர்க்கா ?
குரான் மறுமை நாளின் அடையாளங்களை கொண்டது அதை சந்தேகப்பட வேண்டாம் என்பதற்கா ?

என்று அடுத்து கேட்கிறீர்கள்.

மலக்குமார்களை பற்றி இடையில் சொல்கிறான், ஆகவே இது ஈசா நபியை பற்றி பேசும் வசனமல்ல என்கிறீர்கள். மலக்குமார்களை பற்றி பேசுவதே இது ஈசா நபியை தான் சொல்கிறது என்பதற்கான ஆதாரம் தான் என்கிறேன் நான் ! எது எனக்கு ஆதாரமோ, அதையே எனக்கு எதிராக வைக்கிறீர்கள்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

'எங்கள் கடவுள்கள் சிறந்தவர் களா? அல்லது அவரா?' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம்.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'  

ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'ஞானத்தை உங் களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!' எனக் கூறினார்.


என்று போகிறது அந்த வசன தொடர். இதில் அல்லாஹ் மலக்குகளை பற்றி எதற்கு சொல்கிறான்? ஈசா நபியை நபி என்று நம்பாமல் கடவுளாக ஆக்கியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்க்குரியவர்கள்,  அல்லாஹ் ஈஸாவை இஸ்ராயீல் மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கினான். அவர் நபியை தவிர வேறில்லை. அப்படி நம்பாமல் அவரை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை அல்லாஹ் நினைத்தால் அழித்து விட்டு மலக்குகளை கொண்டு வந்திருப்பான் ! அவர் கியாமத் நாளின் அடையாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்.  இதிலிருந்து ஷைத்தான் உங்களை தடுத்து விட வேண்டாம், ஈசா தெளிவான சான்றுகளை கொண்டு வந்தார் !!!

வசனங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படி வரிசைப்படுத்தி நமக்கு தந்தார்களோ அதே வரிசையிலேயே நான் மேலே விளக்கியுள்ளேன். இதை படிக்கும் போது இடையில் குர் ஆன் கியாமத் நாள் என்று சொல்வது தான் பொருத்தமற்றது.

அடுத்தடுத்த வசனங்களில், ஈசா நபியை கடவுளாக நம்பியவர்கள் மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சேர்த்தே அல்லாஹ் சொல்லும் போது, ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்வது பொருந்தி போகிறது.

மேலும், இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் அது குர் ஆனை தான் குறிக்கும் என்று ஒரு வாதத்தையும் முன்னர் வைத்திருந்தீர்கள். அதுவும் தவறு தான்.
ஏனெனில், அந்த வசனத்தில் இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்வது போலவே 43 :64 வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி' 

இதில் குர் ஆனை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை , அவனை வணங்குங்கள் என்று தான் உள்ளது. அதை சொல்லி விட்டு இது தான் நேர்வழி என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அவனை வணங்வது நேர்வழி என்று தான் பொருள். ஆகவே நேர்வழி என்று சொன்னால் அங்கே குர் ஆன் தான் வரும் என்று வாதம் வைக்க முடியாது என்பதற்காக சொல்கிறேன்.

இன்னும் சொல்கிறேன் .. 43 :61 வசனம் நபியிடம் சொல்ல சொல்லி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான், என்று நீங்கள் சொன்ன வாதத்தையும் மேலே நான் காட்டிய 43 :64 வசனம் மறுக்கிறது.

அது கியாத் நாளின் அடையாளம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்றால், அதை சொல்லி விட்டு அல்லாஹ்வே என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான் என்று இந்த வசனத்தில் அல்லாஹ்வே சொல்வானா? 
இதில் பொருளிருக்கிறதா?
இதை யார் தான் சொல்லியிருப்பார் ? நபி தான் சொல்ல முடியும். 43 :61 வசனத்தில் "குல்" என்பது இல்லை என்பதால் அதை நபி சொல்லவில்லை, அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரிய வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், 43 :64 வசனத்திலும் கூட குல் என்பது இல்லை தான். ஆகவே இதையும் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று தான் புரிவீர்களா?
இதன் அடிப்படையில் சிந்தித்தாலும் நீங்கள் வைக்கும் வாதம் தவறு என்று ஆகி விடுகிறது.

ஆக, மேலே நான் எடுத்து வைத்துள்ள வாதங்களை ஒவ்வொன்றாக சிந்தித்தாலேயே, அந்த வசனம் குர் ஆனை சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை என்பதையும், ஈசா நபியை பற்றி சொல்வது தான் பொருத்தமாகவும் பொருளுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் யாரும் அறிந்து கொள்வார்கள்.

அடுத்து,
ஈசா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று வரக்கூடிய வசனத்தை காட்டி இங்கே ஈசா நபியின் மரணத்தை பற்றி சொல்லாமல் அவருக்கு முன்னுள்ள நபிமார்கள் மரணித்ததை அல்லாஹ் சொல்வதன் மூலம் ஈசா நபி இன்னும் இறக்கவில்லை என்று உறுதியாகிறது என்பதை விளக்கியிருந்தேன்.
இதற்கு மறுப்பு சொன்ன நீங்கள், ஈசா நபி இறந்து விட்டார்கள் தான், ஆனால் அதை அவர்களிடம் சொல்வதால் எந்த பயனும் இல்லை, ஆகவே தான் அல்லாஹ் இந்த வசனத்தில் அதை சொல்லவில்லை என்று சொன்னீர்கள்.

இதற்கு பதில் சொன்ன நான், அப்படியானால் ஈசா உணவு உண்பவராக இருந்தார் என்று அடுத்து அல்லாஹ் சொல்கிறானே, உங்கள் கருத்துப்படி அதை சொல்வதிலும் தான் எந்த பயனும் இல்லையே ?? ஈசா நபி மரணித்து விட்டார் என்று நம்பிக்கொண்டே அவரை கடவுளாக கருதியது போல அவர் உணவு உண்பவர் என்று நம்பிக்கொண்டே தான் அவரை கடவுள் என்றும் சொன்னார்கள். ஆகவே அதை சொல்ல வேண்டியதில்லை என்றால் இதையும் சொல்ல வேண்டியதில்லை தான். ஆகவே நீங்கள் சொன்ன காரணம் தவறு என்று விளக்கினேன்.

இதையும் மறுக்க நினைத்த நீங்கள் ஒரு வேடிக்கையான வாதத்தை இப்போது வைகிறீர்கள்.

அதை நீங்கள் என்னிடம் கேட்பதை விடவும் அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அதை அல்லா தான் ஒரு பெரிய சிந்தனைக்கு உரிய விசயமாக சொல்லி காட்டுகிறான். 

அந்த கேள்வியை அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்கிறீர்கள்.
எனது கேள்வியை அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதிலிருந்து, உங்களிடம் இதற்க்கான பதில் இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

இதன் மூலம் இன்னொரு விஷயம் தெளிவாகி விட்டது. ஈசா நபி மரணித்து விட்டார் என்று அந்த கூட்டம் நம்பிக்கொண்டே தான் அவரை கடவுள் என்றும் நம்புகிறார்கள், ஆகவே அவர் மரணிக்க கூடியவர், ஆகவே அவர் கடவுள் இல்லை என்று அல்லாஹ் இங்கு சொல்வது பொருத்தமற்றது என்று நீங்கள் சொன்ன காரணம் தவறு என்று நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

இது பொருந்தாத காரணத்தால் தான் அவரது மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை என்பது உண்மை என்றால்  உணவு உண்பதும் பொருந்தாது  என்பதால் அதையும் தான் அல்லாஹ் சொல்லியிருக்க மாட்டான். 
உங்கள் வாதப்படி, உணவு உண்பதும் பொருந்தாத ஒன்று தான். உங்கள் வாதப்படியே, அத்தகைய "பொருந்தாததை" அல்லாஹ் இங்கு சொல்லியிருக்கிறான் என்பது உண்மை. அப்படியானால் இங்கு ஈசா நபியின் மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்லாததற்கு நீங்கள் சொல்லும் காரணம் இல்லை என்பது உறுதியாகிறது !!!

வேறென்ன காரணம்? இதை நீங்களே சொன்னது போல நாம் இருவரும் தான் சிந்திக்க வேண்டும். 
ஈசா நபி மரணிக்கவில்லை , ஆகவே ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. அதே சமயம், ஈஸா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று சொல்வதிலிருந்து அவர்களை போல ஈசா நபியும் இறக்க கூடியவர் தான் என்பதை அல்லாஹ் சொல்கிறான். இப்படி தான் புரிய வேண்டும்.
இப்படி தான் புரிய வேண்டும் என்பதை உங்களை அறியாமல் நீங்களே ஒப்புக்கொண்டும் விட்டீர்கள்.


அடுத்ததாக, வேதக்காரர்கள் ஈசா நபியின் மரணத்திற்கு முன் அவரை நம்புவார்கள் என்று நான் சொன்னதற்கு, வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்று புரிய வேண்டும் என்றீர்கள். அது இலக்கணத்தின் படி பொருந்தாது என்பது முதல் காரணம் என்றேன்.
கப்ல மவ்திஹி என்பதில் உள்ள ஹி என்றால் அவரை என்று தான் பொருள். இதை மறுக்க, வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன் என்று பொருள் செய்யலாம், இலக்கண பிழை வராது என்று சொல்கிறீர்கள். 
அதுவும் பிழை தான்.
தனது என்பது தன்னில்லை. இதற்கு அரபியில் வேறு சொல் உள்ளது. லஹு..என்கிற துணை சொல் மூலம் குறிப்பிட்டால் தமது, தனது என்கிற பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.
ஹி என்றால் படர்க்கை ! படர்க்கைக்கு தான் ஹி என்கிற சொல் பயன்படும்.

தொடர்ந்து அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார் என்று வருகிறதே என்று கேட்டதற்கு, இடத்திற்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் பொருள் செய்யலாம் என்கிறீர்கள். அவர்களுக்கு சாட்சியாக இருப்பார் என்பது தான் அந்த வசனதிற்க்கான நேரடி பொருள். நேரடி பொருளை நேரடி பொருள் கொண்டு தான் அர்த்தம் செய்ய வேண்டும். அவர் சாட்சியாக இருப்பார் என்றால் அது சிலுவை மரணத்தை நம்புகிறவர்களுக்கு இருக்க முடியாது.

அவரை நம்புவார்கள் என்பதற்கு பதில் அதை நம்புவர்கள், அதை என்றால் சிலுவை மரணத்தை என்று அடுத்ததாக வாதம் வைத்தீர்கள்.

வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னரே அதனை (அவரது மரணத்தை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

அதனை என்பது அதை ஒட்டிய வார்த்தையில் இருந்தே எடுக்க பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒசாமா மரணிப்பதற்கு முன் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளமால் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால்,
இங்கே அதனை என்பது ஒசாமாவின் மரணத்தை என்று தான் முதல் பொருள் தர முடியும்.


இது தவறு என்பதற்கு நான் இரண்டு முக்கிய காரணங்களை சொல்லி விட்டேன், அதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் அதே வாதத்தை உதாரணத்துடன் சொல்கிறீர்கள்.

வேதக்காரர்கள் என்றால்  ஈசா நபியை நபியாக நம்பி அல்லாஹ்வை மட்டுமே வணங்கிய முஸ்லிம்களும் அடங்குவார்கள்.
ஈசா நபியை கடவுளாக நம்பியவர்களும் அடங்குவார்கள்.
ஈசா நபியை கொலை செய்ய முயற்சி செய்தவர்களும் அடங்குவார்கள்.

இந்த மூன்று கூட்டத்தாரில், குறிப்பிட்டு யாரையும் சொல்லாமல் பொதுவாக வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் சிலுவை மரணத்தையே நம்புவார்கள் என்றால், அவர்கள் மரணத்திற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி நம்பினார்கள் என்கிற உங்கள் வாதப்படியே பார்த்தாலும் கூட, இதற்கு பொருள் வராது. ஏனெனில், ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவர் சிலுவையில் இறந்தார் என்று நம்பாத வேதக்காரர்கள் பல உள்ளனர்.
ஆகவே இதற்கு பொருள் இல்லை.

இல்லை இல்லை, சிலுவை மரணத்தை நம்புகிற அந்த ஒரு கூட்டத்தாரை பற்றி தான் இந்த வசனம் சொல்கிறது என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் அதுவும் வேடிக்கை .

அப்படியானால் எப்படி பொருள் வரும்? சிலுவையில் மரணித்தார் என்று நம்பக்கூடிய அந்த வேதக்காரர்கள் அனைவரும் தங்களது மரணத்திற்கு முன் ஈசா நபி சிலுவையில் மரணித்தார் என்று நம்புவார்கள்.

இப்படி பொருள் செய்ய வேண்டும். இதுவும் நகைப்புக்குரிய பொருள் ஆகி விடும்.

மேலும், அதை நம்புவார்கள் என்றால் முந்தைய வசனத்தில் எதை பற்றி சொல்லப்படுகிறதோ அதை நம்புவார்கள் என்று தான் பொருள் செய்ய வேண்டும்.
முந்தைய வசனத்தில் அவரை அல்லாஹ் உயர்த்தியதை பற்றி பேசுகிறான்.
உங்கள் வாதப்படி, உயர்த்தினான் என்பது அந்தஸ்தில் உயர்த்தினான் என்று நீங்கள் சொன்னாலும் கூட, அந்தஸ்தில் உயர்த்தியதை நம்புவார்கள் என்று தான் பொருள் வரும். அப்படி செய்தாலும், ஈசா நபி மரணிக்கவில்லை என்கிற கருத்து தான் அப்போதும் மிஞ்சி நிற்கும் !

அனைத்தையும் விட முக்கியமாக, ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்கிற ஹதீஸ்களில் ஐந்து ஹதீஸ்களை காட்டி இப்போது உங்கள் நிலை என்ன என்று கேட்டிருந்தேன். 
குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், இதை இந்த விவாதத்தின் துவக்கத்திலேயே வைத்து விட்டேன்.

குர் ஆனில் பொதுவாக எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று தான் உள்ளது. ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்படுவதிலிருந்து, ஈசா நபி விஷயத்தில் மட்டும் குர் ஆனின் கருத்துக்கு ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கிறது என்று புரியலாம்.
இதற்கு தாமாக செத்தவை ஹராம் என்று குர் ஆன் சொல்வதற்கு விதிவிலக்கு அளிக்கும் விதமாக கடல் வாழ் உயிரினங்களில் தாமாக செத்தவையும் ஹலால் என்று ஹதீஸ் சொல்வதை எடுத்துக்காட்டியிருந்தேன்.

இதை காட்டியதற்கு காரணம், ஒரு வாதத்திற்கு குர் ஆனில், எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்பதை வைத்து ஈசா நபியும் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், அதற்கு ஹதீஸில் விதிவிலக்கு இருக்கிறது என்கிற அடிப்படையில் பொதுவாக அனைவரும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்கிற பட்டியலில் ஈசா நபி அடங்கமாட்டார்கள் என்று புரிய வேண்டும் என்பதை நினைவூட்டத்தான்  .
பொதுவாக எல்லா உயிரினங்களிலும் தாமாக செத்தவை ஹராம் என்று குர் ஆன் சொல்லும் பட்டியலில் கடல் வாழ் உயிரினனங்கள் அடங்காததை போல !!

இதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், 

நீங்கள் சொன்ன ஹதிஷில் என்ன குறை என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு பதில் இது தான். நீங்கள் சொன்னவைகளிலும் சரி மற்றவைகளிலும் சரி அது குரானிர்க்கு முரணான கருத்துடையது. அவ்வளவு தான்.

என்று மட்டும் துவக்கம் முதல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். 

எங்கே முரண்? எப்படி முரண்? அனைவரும் இறந்து விட்டார்கள் - இது குர் ஆன்
ஈசா நபி மீண்டும் வருவார்கள் - இது ஹதீஸ்.

அனைவரும் இறந்து விட்டார்கள், ஈசா நபியை தவிர - இப்படி புரிய என்ன தடை?

ஈசா நபியை அல்லாஹ் கைப்பற்றினான், கைப்பற்றினான் என்றால் ஈசா நபி இறந்து விட்டார்கள் என்று தான் பொருள், ஆகவே ஈசா நபி இறந்து விட்டார்கள் என்று நேரடியாக குர் ஆனே சொல்கிறது என்று வாதம் வைப்பீர்கள் என்றால் அதுவும் பொருந்தாத வாதம் தான்.

ஒரு வாதத்திற்கு கைப்பற்றினான் என்பது ஈசா நபியின் மரணத்தை தான் குறிக்கிறது என்று வைத்துக்கொண்டால் கூட, ஹதீஸ்களை இதன் காரணமாக மறுக்க தேவையில்லை, ஹதீஸில் மீண்டும் வருவார்கள் என்று தான் உள்ளது. ஏற்கனவே மரணித்தவர் கூட மீண்டும் வரலாம்.

ஆக, 
ஈசா நபி விஷயத்தில் உங்களது இரண்டு நிலைபாடுகளான

  • ஈசா நபி மரணித்து விட்டார்கள்
  • ஈசா நபி மீண்டும் வர மாட்டார்கள் 

ஆகியவற்றில், உங்கள் இரண்டாம் நிலையை மாற்றி ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்கிற உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டே தான் ஆக வேண்டியுள்ளது. ஹதீஸ்களை மறுக்க இயலாததன் மூலம், இதை ஒப்புக்கொண்டு, உங்கள் நிலைபாட்டில் ஒரு பகுதியையாவது நீங்கள் சரி செய்யத்தான் வேண்டும்.
இந்த விவாதம் இதை தெளிவாக்கியிருப்பதற்கு அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்பதால் கைப்பற்றினான் என்பது உயிரை கைப்பற்றுவதை பற்றி பேசுவதாக இருக்க முடியாது, தூக்கத்தில் நமது செயல்களை அல்லாஹ் கட்டுக்குள் கொண்டு வருவது போல அர்த்தம் செய்யலாம் என்று ஈசா நபி மரணிக்கவில்லை என்கிற முதல் நிலைபாட்டையும் சற்று ஆழமாக சிந்திக்கும் போது விளங்கி விடும், இன்ஷா அல்லாஹ் 

நான் எந்த புது வாதத்தையும் வைக்கவில்லை என்று உங்கள் முந்தைய வாய்ப்பின் போது என்னை பற்றி சொல்லியிருந்தீர்கள்.

அவரை உயர்த்தினான் என்பது பற்றியும், அல்லாஹ் வல்லமைமிக்கவன் என்பது பற்றியும், அல்லாஹ் அவரை கைப்பற்றினான் என்பது பற்றியும், என்னளவில் உயர்த்தினான் என்றால் என்ன பொருள் என்பது பற்றியும் பல வாய்ப்புகளில் பல கேள்விகளை கேட்டிருந்தேன். பழைய வாதங்களுக்கு பதில் சொல்லாதவரை அவை புது வாதங்கள் தான் என்பதை புரியுங்கள்.

அவை புது வாதமில்லை என்று நீங்களே கருதி விட்ட காரணத்தால் அவற்றை இப்போது விளக்கவில்லை.
அவற்றை பற்றி எனது இறுதி தொகுப்புரையில் விளக்குகிறேன் இன்ஷா அல்லாஹ்.

இந்த விவாதத்தின் மூலம் நேர்வழியை அல்லாஹ் வெளிச்சமாக்கட்டும் !

வஸ்ஸலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக